எங்க ஊர்வுல ராமு மாமாவை பத்தி தெரியாதவங்க யாருமே கிடையாது. கூப்பிடுறது மாமானாலும் அவரு பெரிய பலசாலி. அந்த காலத்துல குஸ்தி சண்டை, கம்பு சுத்துறதுல பெரிய ஆளு. ஊர் கோவிலுக்கு எதிரே ஒரு சின்ன குடிசை தான் அவரோட வீடு. உறவுனு யாரும் கிடையாது. ஊர் கோவிலுக்கு வர்றவங்க அவரைத் தேடி வந்து பசிக்கு சாப்பாடு, காசு கொடுத்திட்டு போவாங்க. அதை கூட ராமு மாமா போய் யாரு கிட்டேயும் கேட்டது கிடையாது. அதே மாதிரி கையில எதையும் கொடுக்க முடியாது.
உதவி பண்றவங்க ராமு மாமாவுக்கு தெரியாம தான் ராமு மாமா குடிசையில இல்லாதப்ப வச்சிட்டு போவாங்க. ஆனா டெய்லி குளிச்சி, புத்தம் புதுசு போல மைனர் வேஷ்டி, சட்டை போட்டு கிட்டு புது மாப்ள மாதிரி தான் ஜிகு ஜிகுனு இருப்பாரு. அரை சைக்கிள்ல தான் சுத்துவாரு. அந்த குடிசையில் ராமாயணம், மஹாபாரதம், பைபிள், குரான் உட்பட பல மதநூல்களும் வாத்ஸ்யானின் காமசூத்ரா மதன நூலும் முக்கியமா இருக்கும்.
ராமு மாமாவுக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியும். அந்த புத்தகம் சமஸ்கிருதம் என்பதால் யாரும் அதை படிக்க முடியாமல் வயசு வித்தியாசமின்றி அவருகிட்டே விளக்கம் கேட்பாங்க. அவரும் சிரிச்சு கிட்டே இதுவரைக்கும் எவனும் ராமாயணம், மகா பாரத பக்தி நூல்கள்ல கூட விளக்கம் கேட்டது இல்ல. ஆனா இதுல மட்டும் கரெக்டா கேட்குறீங்க. அப்போ மகா காவியங்கள் எல்லாம் விளங்கிடுச்சாக்கும்னு கிண்டல் பண்ணிட்டு தான் காமசூத்திரத்துக்கு விளக்கம் சொல்வாரு.
அதே போல் நோய் நோடினா ஜாதி மத பாகுபாடு இல்லாமல் பல பேரு அவரைத் தேடி வருவாங்க வேப்பிலை, வீபூசி வீசி மந்திரிச்சு நோயை குணப்படுத்தி அனுப்புவாரு. குடிசையில ரெஸ்ட் எடுத்தாலும் ராவுல ஆம்பளை இல்லாத வீட்டு திண்ணையில காவலுக்கு படுத்திருப்பாரு. அதுவும் அவங்களே கூப்பிட்டா தான் போய்ப் படுப்பாரு. பல பேரு குழந்தை பாக்கியம் கேட்டு வந்தா புருஷன் பொண்டாட்டியா வாங்கனு அனுப்பி வைப்பாரு.
அப்படி ஜோடியா வர்றவங்க நாடிய மட்டும் பிடிச்சு பார்த்துட்டு ரொம்ப கஷ்டம். வாய்ப்பு குறைவு தான். உன் வீட்டு திண்ணையில என்னை படுக்க கூப்பிடு அப்புறம் பாரு என்று வரும் ஜோடிகளுக்கு தீர்வு சொல்லி அனுப்புவார். ஒரு வேலை வரும் ஜோடிகளுக்கு சான்ஸ் இருந்தால் அவசரப்படாதே இன்னும் 1 வருஷம் கணக்கு இருக்கு அதுவும் சரி படலேனா உனக்கும் திண்ணை தான் என்பார். அப்படி யாராவது அழைத்து ராமு மாமா திண்ணையில் படுத்தால் அந்த வீட்ல சீக்கிரமே ஏதோ சுப காரியம் நடக்க போகுதுனு விளங்கிடும். ஆனால் இந்த ராமு மாமா ட்ர்ட்மென்டை யாரும் தவறாக கண்டது இல்லை. அதை அக்கம் பக்கம் கூட கிசுகிசுக்க மாட்டார்கள்.
சில பெண்களே கூட பேசும் போது இன்னும் ஏண்டி காத்துகிட்டு இருக்கே, ட்ரீட்மென்ட் அது இதுனு காசை வீண் ஆக்காதே, நம்ப ராமு மாமா கிட்டே போ ஒரு ராவுல உன் கவலைய தீர்த்திட போறாரு என்று தான் பேசுவார்கள். வாக்கப்பட்டு வெளியூர் போன பெண்கள் கூட வந்து வீட்டில் தங்கி, ராமு மாமாவை திண்ணைக்கு வர வைத்து, புகுந்த வீட்டுக்கு தெரியாமலேயே பிரச்சனையை தீர்த்து கொண்டு போவதும் உண்டு.
அப்படி எங்க ஊர் ராமு மாமா பல பேரோட பிள்ளைப் பேறு பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கிறார். அதே போல் பிரசவத்துக்கு முன்பு ராமு மாமா ஓதி அனுப்பினால் சுகப்பிரசவம் தான். திண்ணையில் படுக்க கூப்பிட்டு, திரும்பும் போதே பிள்ளை பிறக்கும் பிறை, தேதியை கூட புட்டு புட்டு வைத்துவிட்டு தான் போவார். கும்பிடும் கடவுள்கள் கஷ்டங்களை தீர்த்ததோ இல்லையோ எங்க ஊர்வில் ராமு மாமா கஷ்டங்களைப் போக்கும் கடவுளின் திரு உருவமாக தான் உலாவி கொண்டு இருந்தார்.
எல்லோரையும் போல சாரதாம்மா அழைத்து தான் ராமு அவள் வீட்டு திண்ணையில் படுத்தார். ஆனால் சாரதாம்மா மாசமான பிறகு தான் ஊர்வில் பெரிய பிரச்சனை உருவானது. சாரதாம்மாவும் மாமாவைப்போல் தான் ஆனால் திருமணமாகி புருஷனை இழந்தவள். பிள்ளைகள் கிடையாது. ஆனால் கடைசி காலத்தில் வாரிசு இல்லாமல் அனாதை ஆகிவிடக்கூடாது என்று தான் ராமு மாமாவிடம் புலம்பி இருக்கிறாள்.
மாமாவும் அவள் நாடி பிடித்து பார்த்து விட்டு, ஒண்ணும் குறை இல்லே இன்னும் 15 வருஷத்துக்கு உனக்கு ஆயுசு கெட்டி. நாளைக்கே புள்ளைய பெத்துக்கோ ஆண் வாரிசு தான் உனக்கு. உன்னோட கஷ்டம் தீர்ந்தாச்சுனு நினைச்சுக்கோ என்று சொல்ல அன்று இரவே ராமு மாமாவை சாரதாம்மா திண்ணைக்கு படுக்க் அழைத்து விட்டாள். ராமு மாமா இன்று யார் வீட்டு திண்ணையில் படுக்கிறார் என்பது பிளாஷ் நியூசாக ஊர்வில் பரவி விட்டது. அவ வீட்டு திண்ணையில எதுக்கு ராமு மாமா படுக்கணும் என்ற விவாதம் ஊர்வில் சூட்டை கிளப்பியது.
அன்று சாரதாம்மா வீட்டில் படுத்த விபரம் மொத்த ஊருக்கும் தெரிந்தாலும் பல பேர் அவளுக்கு வேறு என்ன குறையோ என்று தான் யோசித்தார்கள். அவளுக்கு பிள்ளை வரம் கொடுக்க தான் ராமு சாரதாம்மா வீட்டு திண்ணையில் படுத்திருக்கிறார் என்று பலரால் யூகிக்க முடியவில்லை. மேலும் மாமா சும்மா கூட பகலில் பலர் வீட்டு திண்ணையில் படுப்பதும் உண்டு. அப்படித்தான் மாமா படுத்திருப்பதாக பலர் நினைத்து இருக்கிறார்கள்.
ஆனால் வீரியமான மாமாவின் விதை வரம் குழந்தையாக மாறி சாரதாம்மாவின் கர்ப்பத்தில் வளர்ந்து வயிற்றை நிரப்பிய பிறகு தான் ஊர் மக்களை முகம் சுழிக்க வைத்து விட்டது. ஊர் கூட்டம் கூடியது அதெப்படி அனாதையான அதுவும் கல்யாணமாகி புருஷனை இழந்த சாரதாம்மாவுக்கு ராமு மாமா குழந்தை பேறு கொடுக்கலாம் என்று ஊர் பஞ்சாயத்தில் பிரச்சனை தீப்பொறி ஆக கிளம்பியது. ஊரின் அழுத்தத்தால் பெரியவர்கள் ராமு மாமாவை விசாரிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
ராமு மாமா எதற்கும் கலங்காக பலசாலி ஆயிற்றே. கம்பீரமாக சைக்கிளில் வந்து இறங்கினார். முதலில் கூட்டத்தாரிடம் வழக்கமா இந்த நேரத்துல நான் சுல்தான் பாய் கடையில சுக்கு காப்பி குடிக்கிற டைம். இன்னைக்கு நீங்க பஞ்சாயத்துக்கு அவசராம கூப்பிட்டதால ஊர் மரியாதைக்கு உடனே வந்துட்டேன். முதல்ல யாரையாவது அனுப்பி சுல்தான் பாய் கடையில சுக்கு காபி வாங்கிட்டு வரச் சொல்லுங்க அப்புறம் பஞ்சாயத்து கேட்கிற கேள்விக்கு கட்டுபட்டு பதில் சொல்றேன் என்று ராமு மாமா அசால்ட்டாக சொன்னதை கேட்டு ஊர் அவரை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு பார்த்தது.
இதோ பாருங்க நான் இந்த ஊருக்கு பொழைக்க வந்தவன் தான். அதுக்காக யாருக்கும் அடிமை கிடையாது. ஏதோ பல வருஷம் உங்க முன்னாடி வாழ்ந்த மரியாதைக்கு தான் வந்தேன். அல்லாவுக்கு மட்டும் தான் கட்டுப்படுவேன். நான் பண்ணது கூட அல்லாவின் ஆணை தான். அதுபடி தான் உங்களோட பலபேர் திண்ணையில படுத்திருக்கேன். அது கூட நீங்க கூப்பிட்டுத்தான் நானா யாரு வீட்டு திண்ணையிலும் படுத்தது கிடையாது.
இதே சாரதாம்மா என்கிட்டே தீர்வுக்கு வராம இந்த ஊர் கூட்டத்துல நான் அனாதையா சாவ விரும்பல. படுத்த படைக்கை ஆகிட்டா என்னை யாரு பார்த்துப்பானு வந்து நின்னிருந்தா என்ன தீர்ப்பு கொடுத்திருப்பீங்க. அதுக்கு பதில் சொல்லுங்க நான் விளக்கம் சொல்றேன் என்றார்.
ஊர் அமைதி ஆகி விட்டாலும், இல்ல மாமா இது தப்பான உதாரணம் ஆகிட கூடாது என்று ஒருவர் பேச ஆரம்பித்த போது, எது தப்பு, எது சரினு யாரு முடிவு பண்றது. அப்படி பார்த்தா நான் திண்ணையில படுத்ததே தப்பு தான். படுக்க கூப்பிட்டதும் தப்பு தான் என்றார். ஆனால் அதற்கு ஊர் அமைதி ஆகிவிட, சரி எப்போ நானே பிரச்சனை ஆகிட்டேனோ இதுக்கு நானே முடிவு கட்டுறேன்.
சாரதாம்மா இனிமே தனி, நான் தனி கிடையாது. அவளை நான் கட்டிக்கிறேன். இது வரைக்கும் பொது நலத்தோடு வாழந்துட்டேன். அது தப்புனு உணர்றேன். நானும் சாரதாம்மா போல அனாதை தான். எனக்கும் இப்போ எதிர்காலத்தை பத்தி பயம் வந்துடுச்சு. அதனால் நான் நாளைக்கு விடியறதுக்குள்ள சாரதாம்மாவோட இந்த ஊரை விட்டு போயிடுறேன். நல்லவங்க, பெரியவங்க இதுவரைக்கும் என் மேல் அன்பு ஆதரவு காட்டினதுக்கு நன்றி. சாரதாம்மாவோட வீட்டை கூட வித்து ஊர் கோவிலுக்கு நன்கொடையா கொடுத்திடுங்க.
இதை சாரதாம்மாவோட அனுமதி இல்லாமத்தான் சொல்றேன். அவளும் மறுக்கமாட்டாள். இனி காலம்பூரா அவளுக்கு நானும் எனக்கு அவளும் துணை. நான் கும்பிடுற எல்லாம் வல்ல தெய்வம் எங்களை காப்பாத்தும் அது இனிமே இந்த ஊரையும் காப்பாத்தட்டும் என்று சொல்லி விட்டு சைக்கிளை எடுத்து கொண்டு சாரதாம்மா வீட்டுக்கு வந்து அவளை அழைத்து கொண்டு ஊரை விட்டு கிளம்பினார். அது வரை ராமு மாமாவாக பார்த்த மொத்த ஊரும் மெளனமாக நின்றாலும் சிலர் கண்களில் கண்ணீர்.
ராமு மாமாவோ ஒரு ஹீரோவைப்போல் தன் கம்பீரம் குறையாமல் ஊரை கடந்து போனார். மாமா ஊரை விட்டு கிளம்பி போன பிறகு அந்த ஊரே களை இழந்தது. எதையோ இழந்ததை போல் தவித்தது. பலர் ஒருவருக்கு ஒருவர் ராமு மாமாவை பற்றி புறம் பேசியதற்கு மாற்றி மாற்றி பழித்துக் கொண்டார்கள். அவரால் பயன் பெற்று, நோய் நொடி தீர்ந்து, குழந்தை வரம் பெற்ற பல குடும்பங்கள் மட்டும் அவருக்காக மனம் விட்டு அழுது தங்களின் ஆற்றாமையை ஆறுதலாக்கி அவர் போன பாதையை மட்டும் வெறித்தபடி பார்த்து நின்றார்கள். அவர்களுக்கு தெரியும் இனி அந்த கடவுளின் திரு உருவம் எக்காரணம் கொண்டும் இந்த ஊர் மண்ணை மிதிக்காது என்று.
எங்கேயோ ஏதோ ஒரு ஊரில் ஊர் கோவில் அருகில் தான் ராமு மாமாகள் தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இனி ராமு மாமா வாழ போவது அவரோட வாழ்க்கையை மட்டும் தான் அதுவும் அவரோட அன்புக்குரிய சாரதாம்மா வோடு. மனித ஜென்மமும். இந்த ஜன சமூகமும் சாபத்தின் மொத்த உருவங்கள். தங்களுக்கு சாதகமாக தான் எதுவும் இயங்க வேண்டும். தங்களை விட்டு விலகினால் அது எதையும் விலக்கி வைத்து விடும். அப்படி விவஸ்தையற்ற இந்த ஜன சமூகம் தான் இந்த உலகம் அழியும் வரை வாழ்வாங்கு வாழ்ந்து வீணாக அழிந்து போகப் போகிறது.
நன்றி..!